மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவை மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடத்துகிறது. நாடு முழுவதும் 748 மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து இந்நிகழ்ச்சிக்கு 1,000 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், மாவட்ட அளவிலான இந்நிகழ்ச்சி கடந்த 14 முதல் 19 வரை நடந்தது. இதில் 1,800 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான தேசிய இளைஞர் திருவிழாவில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் இருந்து 76 பேரும், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து தலா இருவரும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டை, ராதா நகரில் உள்ள எம்.ஐ.டி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. அனைவருடனும் அனைவருக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதம், மேக் இன் இந்தியா, கேலோ இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா உட்பட 7 தலைப்புகளில் இவ்விழா நடைபெறுகிறது.