உத்தரப் பிரதேசம் அசம்கர் பகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் நிராஹுவாவுக்கு ஆதரவு கோரி அசம்கரில் உள்ள சக்ரபன்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்ததுடன் சமூகத்தில் தவறான நடைமுறைகளை பரப்பி இளைஞர்களின் வாழ்க்கையை நாசம் செய்தன. அவர்களின் அரசியல் என்பது குடும்பம் மற்றும் சுயநல இலக்குகளைச் சுற்றியே இருந்தது. மாநிலத்தின் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளின் நல்வாழ்வு, பெண்கள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒருபோதும் இல்லை. இந்த மாவட்டத்தை மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாற மக்கள் அனுமதிக்க வேண்டாம். பயங்கரவாதத்தின் நாற்றங்கால் என்ற அசம்கரின் அவப்பெயரை இளைஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். இரண்டு முதல்வர்களை வழங்கிய போதிலும், அசம்கர் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புத் திட்டம் ‘அக்னிபத்’துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரத்தால் இளைஞர்கள் தவறான வழிலில் செல்ல வேண்டாம். இத்திட்டம் இளைஞர்களின் நலன் மற்றும் தேசத்தின் நலனுக்கு ஆதரவானது’ என கூறினார். மேலும் பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.