மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது.கூட்டத்தில், 2024ல் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் வெற்றி வியூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதில், அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து, அதனை வலுப்படுத்த வேண்டும்.மக்களவை தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இணையும் பட்சத்தில், முன்பைவிட தற்போது கூடுதல் இடங்களை கேட்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலில், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து பா.ஜ.கவிற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும், அந்தந்த தொகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார். அதேபோல, கட்சியிலிருந்து சிலரை தற்காலிகமாக நீக்கியது தொடர்பான ஆலோசனையின்போது, கட்சிக்கு யாரேனும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்காக உழைக்க தயாராக இல்லாதவர்கள் உடனே கட்சியை விட்டு வெளியேறலாம் என அண்ணாமலை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.