அமெரிக்கவின் தென்கிழக்கு மாகாணமான அலபாமாவில் பல வருடங்களாக யோகா மீதான தடை நீடித்தது. சில மாதங்களுக்கு முன் உடற்பயிற்சி கூடங்களில் யோகா செய்ய விதித்திருந்த தடையை நீக்கியது இந்த மாகாண நிர்வாகம். தற்போது, அரசு பொதுப் பள்ளிகளிலும் யோகா மீதான பல வருடத் தடையை நீக்கி உள்ளது. இருப்பினும், நமஸ்தே போன்ற வார்த்தைகள், ஆன்மீக மந்திரங்கள், சமஸ்கிருத சொற்கள் மீதான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் ஆளுநர் கே. ஐவி கையெழுத்திட்டார். மாநிலக் கல்வி வாரியம் 1993ல் அரசு பொதுப் பள்ளிகளில் யோகாவை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பழமைவாத குழுக்கள் தடையை நீக்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்தன. ஏனெனில் இந்த நடைமுறை ஹிந்து மதம் மற்றும் பௌத்த மதத்துடன் தொடர்புடையது என்று அவர்கள் நம்புகின்றனர்.
தடையை நீக்க தொடர் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜெரமி கிரே, ‘இது ஒரு பைபிள் அரசாக இருப்பதாலும் மத போதனையாளர்களும் யோகா கிறிஸ்தவத்திற்கு அச்சுறுத்தல் என்று நம்புகிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே உணர்வுகள் அவர்களிடம் உள்ளன. யோகா மன ஆரோக்கியத்திற்கு உதவ ஒரு சிறந்த வழி. யோகாவை பயிற்சி செய்வதால், எதிலும் கவனம் செலுத்த முடிகிறது. தெளிவாக முடிவெடுக்க உதவுகிறது. மன அழுத்தத்தை போக்குகிறது, கோபம், பதட்டம் போன்றவற்றை சமாளிக்க உதவுகிறது’ என கூறியுள்ளார் என இன்டிபென்டன்ட் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது. மாநிலத்தில் சில பள்ளிகள் ஏற்கனவே யோகா பயிற்சி செய்திருந்தாலும், வேறு பெயர்களுடன் பயிற்சி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. மக்கள் இதில் பெரும் ஈடுபாடு காட்டியதால்தான் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.