மாதா அமிர்தானந்தமயி தேவியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் அமிர்தபுரியில் நடைபெற்ற விழாவில், அவருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உலக தலைவர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், கேரள மாநில ஆளுநர், 170 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு சேவைகளை செய்து வரும் மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு பாஸ்டன் குளோபல் ஃபோரம் (பிஜிஎஃப்), மைக்கேல் டுகாகிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் லீடர்ஷிப் அண்ட் இன்னோவேஷன் (எம்டிஐ) ஆகிய சர்வதேச அமைப்புகளால் இந்த ஆண்டுக்கான அமைதி, பாதுகாப்புக்கான உலகத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த ஜூலை 31-ம் தேதி நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது, இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் அடுத்த அமிர்தபுரியில் மாதா அமிர்தானந்தமயி 70-வது பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களாக உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில், அவருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதி, பாதுகாப்புக்கான உலகத் தலைவர் விருதை, பிஜிஎஃப் நிறுவனர் டியுவான் கியூன் வழங்கினார். உலக அமைதி, ஆன்மிகம், கருணையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோடி வாழ்த்தும் வீடியோ: விழாவில், மாதா அமிர்தானந்தமயிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய பிரதமர், ‘‘அன்பு, கருணை, தியாகம், தொண்டு ஆகியவற்றின் திருஉருவமாக அம்மா திகழ்கிறார். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஏராளமான சேவைகளை செய்து வருகிறார். நாட்டின் ஆன்மிகம், பாரம்பரியத்தை காப்பாற்றி வருகிறார்’’ என்று புகழாரம் சூட்டினார். அமிர்தானந்தமயி வெளியிட்ட செய்தியில், ‘அனைவரும் நல்ல செயல்களில் ஈடுபடுவதோடு, ஒற்றுமையுடன் வாழவும், இயற்கையை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 70 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் அவர் சந்தன மரத்தை நட்டார்.
2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு: விழாவில், கேரள மாநில ஆளுநர் ஆரீப் முகம்மது கான், மத்திய அமைச்சர்கள் மகேந்திரநாத் பாண்டே, அஸ்வினி குமார் சவுபே, வி.முரளிதரன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், கேரள மாநில துணை சபாநாயகர் சிட்டயம் கோபகுமார், கேரள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், 170 நாடுகளை சேர்ந்த பிரநிதிகள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விருது பெற்றுள்ள மாதா அமிர்தானந்தமயியை கவுரவித்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கிழக்கு லோப் ஹவுஸில் நவ.2-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில், அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.