உணர்வை, தகவலை, தேவையைச் சொல்லும் எளிய குறியீட்டுப் படங்களே எமோஜிக்கள். இவை மக்களால் தற்போது முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துகள்தான் என்பதால், அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக கருதப்படுகின்றனர்.
1998ல் ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு முதல் செயல்வடிவம் கொடுத்தது. அந்த நிறுவனத்தில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் செய்திகளைப் படங்களாகச் சொல்ல நினைத்தார், அப்போது விரிவான படங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாததால் அவர் உருவாக்கிய எளிய வடிவம்தான் எமோஜி.
மக்கள் அன்றாடம் வெளிப்படுத்தும் 180 வகையான உணர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்கான எமோஜிக்களை மட்டுமே உருவாக்கினார் குரிடா. தற்போது அது பல்லாயிரம் எமோஜிக்களாக வந்துவிட்டன. இன்றைக்கு நாம் எமோஜிக்களை வைத்து மட்டுமே கதை சொல்லலாம், கவிதைகளை எழுதலாம் என்னும் அளவுக்கு எமோஜிக்களின் பயன்பாடுகள் மாறியுள்ளன. இதற்காக என்றே பிரத்யேக வலைத்தளங்களும்கூட உள்ளன. இயற்கைப் பேரிடர்களுக்கான குறியீடுகளை எமோஜிக்கள் இருந்தால் அது, எச்சரிக்கைகளை விடுப்பதை உலக அளவில் எளிதாக்கும் என்பதால், அது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
உலகில் தற்போது சுமார் 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் அனைவருக்குமான ஒரே பொது மொழியாக எமோஜிக்கள் மாறிவிடும் என கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய ஆய்வுகளும் இது குறித்து நடந்து வருகின்றன.