குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் பாரதத்தில் முதன் முதலில் ‘சதுரங்கம்’ எனப்படும் ‘செஸ்’ தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த மே 12, 2019ல் குஜராத்தின் லோதலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு சதுரங்கப் பலகை, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தது என்றும் கிமு 2300க்கு முந்தையது எனவும் கூறப்படுகிறது. ‘சத்ரங்’ என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக வளர்ந்து, 9ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. 15 ம் நூற்றாண்டில் அது ஐரோப்பாவில் பரவி காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. பிறகு, அங்கிருந்து உலகமெங்கும் பரவியது. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான் புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் என்ற ஸ்பெயின் நாட்டவரையே சேரும். அவருடைய Repetition of Love and the Art of Playing Chess என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.
உலகளவிலான செஸ் போட்டி 1851ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. இதில் ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ப் ஆண்டர்சன் என்பவர் வெற்றி பெற்றார். இரண்டாம் உலகப் போருக்கு பின் நிறைய உலகப் போட்டிகள் நடத்தப்பட்டன. உலக செஸ் பெடரேஷன் (FIDE) 20 ஜூலை 1924ல் தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூறும் விதமாகவே இன்று உலக செஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மற்ற விளையாட்டுகளைவிடச் சதுரங்க விளையாட்டு சற்றே நுட்மானது. மூளைக்கும் கற்பனை ஓட்டத்துக்கும் வேலை கொடுத்து விளையாட வேண்டிய விளையாட்டு. புதிர்களுக்கு விடை காண்பது போல நுட்பத்துடன் விளையாடினால்தான் வெற்றி கிட்டும். பொதுவாக ‘விளையாட்டு நாள்’ என்பது உலகில் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு ‘விளையாட்டுக்காகவே ஒரு நாள்’ என தனியாகக் கடைப்பிடிக்கப்படுவது அரிது. சதுரங்க விளையாட்டுக்கு அந்தப் பெருமை உண்டு.
கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது முதலே ‘இண்டோர் கேம்ஸ்’ என்று சொல்லப்படும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடியது. அவற்றில் ‘செஸ்’ எனப்படும் சதுரங்க விளையாட்டு முக்கிய இடத்தைப் பிடித்ததாக ஐ.நா சபையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோபாலகிருஷ்ணன்