உலக அலவில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சட்டப்படி தவறு. ஆனால், ஜப்பானில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வேலைக்கு எடுக்கும் அமைப்பு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் உள்ள முதியோர் இல்லமொன்றில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய உற்சாகத்தை உயர்த்துவதற்காக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த அந்த இல்லத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த இல்லத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும், அவர்கள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு சேர்த்து முதியோர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை ஏற்படுத்த முதியோர் இல்லத்தின் தலைவர் கிமி கோண்டோ இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். சில குழந்தைகள் எங்கள் முதியோர்கள் உடன் மிகவும் நன்றாக பழகுகிறார்கள் என்றும் அவர்கள் உண்மையாகவே இந்த முதியவர்களை தாத்தா பாட்டி என்று அழைத்து பேரக்குழந்தைகளை போல் இருப்பது ஒரு குடும்ப உறவை ஏற்படுத்துகிறது. வேலைக்கு எடுக்கப்படும் குழந்தைகளது பசி, தூக்கம் மற்றும் மனநிலை கண்காணிக்கப்படும். குழந்தைகள் ஓய்வு எடுக்க தாராளமாக அனுமதிக்கப்படுவார்கள். பணியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தேவைப்படும் உடைகள், உணவு மற்றும் பால் பாக்கெட் உள்பட அனைத்தும் இல்லத்தின் நிர்வாகமே செய்து கொடுக்கும் என்று முதியோர் இல்ல நிர்வாகி தெரிவித்துள்ளார். குழந்தைகளை வேலைக்கு வைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த இல்லத்தில் உள்ள முதியவர்கள், ‘நாங்கள் இங்கு வரும் குழந்தைகளை பார்க்கும்போது எங்கள் வீட்டில் உள்ளவர்களை பார்ப்பது போல் இருக்கிறது. அவர்களுடன் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நாங்கள் குழந்தைகளின் பெற்றோர்களாகவே மாறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.