அக்னி வீரர்களுக்கு வேலை

அக்னிபத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘போர் சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது. நேருக்கு நேர் போரிடும் சூழல் மாறி கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருந்தும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனும் போர் நடைபெறுகிறது. போரில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலத்துக்கு ஏற்ப பாரதமும் மாற வேண்டியுள்ளது. கடந்த 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பாரதத்தை வலிமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த முப்படைகளின் தளபதி பதவியை உருவாக்கினார். முப்படைகளிலும் அதிநவீன ஆயுதங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது பாரதத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நமது பாதுகாப்புப் படைகள் இளமையானதாக இல்லை. முப்படைகளிலும் இளைஞர்கள் நிறைந்திருக்கவே அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதைய நடைமுறையில் ஒரு வீரர் 15 ஆண்டுகள் வரை படையில் பணியாற்றுகிறார். அவர் தன்னுடைய 35வது வயதில் ஓய்வு பெறுவார். ஓய்வூதியத்தில் மட்டுமே அவர் குடும்பத்தை நடத்த முடியாது. புதிய வேலைவாய்ப்பை தேட வேண்டும். 35 வயதில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினம். ஆனால், அக்னி பாதை திட்டத்தில் ஒரு வீரர், 4 ஆண்டுகள் பணியாற்றுவார். தன்னுடைய 25வது வயதில் அவர் பணியை நிறைவு செய்வார். அந்த வயதில் அடுத்த வேலைவாய்ப்பை தேடுவது எளிது. அரசு, தனியார் துறைகள் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளன. அக்னி வீரர் ஓய்வு பெறும்போது அவருக்கு சுமார் ரூ. 11 லட்சம் கிடைக்கிறது. இந்த தொகையை முதலீடு செய்து அவர் தொழில் தொடங்கலாம். உயர் கல்வியை தொடரலாம். சாதாரண இளைஞர்களைவிட அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அக்னி பாதை திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், ஒழுக்கம், கடமை, தேசப்பற்று நிறைந்தவர்களாக, நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வார்கள்’ என்று கூறியுள்ளார்.