ஆப்கனில் பெண்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அண்டை நாடுகளிடம் தஞ்சம், தலிபான்களிடமே தஞ்சம் என அந்நாட்டு ராணுவ வீரர்களும் ஓடி விட்டனர். மக்கள் சாரிசாரியாக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு என கூறும் தலிபான்கள், காபூலில் உள்ள வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆப்கானிஸ்தானில் படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடம் இருந்து பறிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தலைநகர் காபூலில் 4 பெண்கள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் தலிபான்கள் அவர்களை சுற்றி சுற்றி வந்தனர். அவர்களின் நிலை பிறகு என்னவாகும் என்பதையும் தாண்டி அவர்கள் முன்னெடுத்த இந்த போராட்டம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.