மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருடன், 38 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் தற்போது தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா சார்பில் சட்டசபை துணை சபாநாயகரிடம் கோரப்பட்டது. துணை சபாநாயகரும்க 16 சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, 38 அதிருப்தி சிவசேனா எம்.எ.ல்ஏக்கள் மஹாராஷ்டிர அரசுக்கு தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம், இதனையடுத்து தற்போது சிவசேனா தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது மஹாராஷ்டிர அரசு கவிழ்வது அனேகமாக உறுதியாகியுள்ளது.