பணத்தின் மதிப்பு குறையும்போழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பது பொருளாதார விதி. அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது உற்பத்தி, விளைச்சல், தேவை, போக்குவரத்து, காலம் என பல்வேறு காரணிகளை சேர்ந்தது. இன்றைய காலத்தில் ஏற்படும் விலை மாற்றறங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது பெட்ரோல், டீசல் விலைதான். மேலும், பெட்ரோல், டீசலுக்கு அதிகம் வரி விதிப்பது மாநில அரசுகள்தானே தவிர மத்திய அரசு அல்ல என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
பணவீக்கம்:
தேசிய புள்ளியியல் துறை அண்மையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த குறியீட்டு அளவையும் கடந்து மொத்த விற்பனை விலை 12.94 சதவீதமும், அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனை விலை உயர்வு 6.3 சதவீதமும் கடந்த 6 மாதங்களில் அதிகரித்திருக்கிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை 37.61 சதவீதம், உணவு பொருட்களின் விலை 6.3 சதவீதம், உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை 9.39 சதவீதம், சமையல் எண்ணெய் 30 சதவீதம் வெங்காயம் 23.24 சதவீதம் அதிகரித்துள்ளது.
உண்மை நிலவரம்:
இந்த விலை உயர்வு கிராமப்புறங்களில் 6.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6 சதவீதமாகவும் காணப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இந்த பொருட்களின் விலை மிக அதிகபட்சமாக 4.2 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. புள்ளியியல் துறையின் தகவல்களில்படி இது 6.5 சதவீதம் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் பொருட்களின் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கள எதார்த்தம்:
இதற்கு முக்கியக் காரணமாக கொரோனாவும் அதனை கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால் சரக்குகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், கொரோனாவால் தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், கடைகள், மழலையர் பள்ளிகள் அடியோடு மூடப்பட்டுவிட்டன. இதனால் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டன. பலரின் வேலையும் பறிபோய்விட்டது, வருமானமும் குறைந்துவிட்டது ஒருபுறம் என்றால் மறுபுறம் மருத்துவ செலவு, ஆன்லைன் கல்வி என செலவுகள் அதிகரித்துவிட்டன.
இதுமட்டுமா?
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மட்டுமல்ல, கட்டுமானப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டுகிறது. இதனால் கட்டுமானத் தொழில் ஸ்தம்பிக்கும். அதனை நம்பியுள்ள எலெக்ட்ரிக், பிளம்பிங்க், பெயிண்ட், டைல்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழில்களும் அதனை நம்பியுள்ள லட்சக்கணகான தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். இதனை சரி செய்ய தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
யார் கடமை?
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறி தப்பித்துக் கொள்லலாம் என தமிழக அரசு எண்ணக்கூடாது. அரசு கொடுக்கும் கொரோனா கால நிவாரண நிதியான 4,000 ரூபாயும், 14 வித பொருட்களும் அதிக பட்சம் 10 நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். அதன் பிறகு!? தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலையையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது மாநில அரசின் கடமை.
அரசு என்ன செய்யலாம்?
டாஸ்மாக் திறப்பு, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வரிகள் உயர்வு என வழக்கம்போல சிந்தித்து ஏற்கனவே சிரமப்படும் மக்களை மேலும் சிரமப்படுத்துவதைவிட, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை நிரந்தரமாக கட்டுக்குள் வைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
மதிமுகன்