மீண்டும் வருமா தட்டுப்பாடு?

ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின் உலகளவில் பல பிரச்சனைகள் தலைதூக்கத் துவங்கின. குறிப்பாகக் கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றில் அதிகப்படியான பாதிப்புகள் உலக நாடுகளுக்கு ஏற்பட்டு அவற்றின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ரஷ்யா, உக்ரைனுடனான மிக முக்கிய கப்பல் வர்த்தகத்திற்குச் செய்த ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளதாக அஞ்சப்படுகிறது.

உலக அளவில் தானியங்கள் ஏற்றுமதியில் உக்ரைன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் தானியங்கள் ஏற்றுமதியில் உக்ரைன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ரஷ்யா உக்ரைன் போர் துவங்கியபோது, உக்ரைன் நாட்டின் உணவு தானிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. உலக நாடுகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு உருவானது. இந்த காலகட்டத்தில், பாரதம் உலக நாடுகள் உணவு பொருட்கள் குறிப்பாகக் கோதுமையை அனுப்பி உதவியது. உலக அளவில் நிலவும் இந்த உணவு பற்றாக்குறை பிரச்சனையைச் சமாளிக்க கடந்த ஜூலை மாதம் ரஷ்யா உக்ரைன் இடையே தானியங்களைக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என துருக்கி மற்றும் ஐ.நா சபை ஆகியவை, ரஷ்யாவிடம் பேசி அனுமதி பெற்றன. இந்த ஒப்பந்தம் வாயிலாக, உக்ரைனில் இருந்து இதுவரை 90 லட்சம் டன் அளவிலான தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உணவு பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கிரிமியாவில் நடந்த பாலத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதல், டுரோன் தாக்க்குதல்களால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதனால், மீண்டும்உலக நாடுகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷ்யா எடுத்துள்ள முடிவு முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யா உணவை ஆயுதமாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தற்போது துறைமுகத்தில் 10க்கும் அதிகமாகக் கப்பல்கள் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்குப் பெரிய அளவிலான உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாக்கியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, ‘பாரதத்திலும் இதன் பாதிப்பு கட்டாயம் எதிரொலிக்கும், உக்ரைன் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டால் உலக நாடுகள் பாரதத்தின் உதவியை நாடும். ஏற்கனவே பாரதத்தில் தானியங்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், இங்கிருந்து ஏற்றுமதி அதிகமானால் தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை மேலும் அதிகரிக்கும்’ என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு ரஷ்யாவை மட்டுமே நம்பி இயங்கி வந்த நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்குப் பிறகு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மொத்தமாக நிறுத்தியது. எரிவாயு விநியோகத்தை நார்டு ஸ்ட்ரீம் பைப்லைன் வாயிலாக ஏற்றுமதி செய்து வந்த நிலையில் அதையும் பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் மொத்தமாக நிறுத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப் பல தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளன. இதனால், உற்பத்தி, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து அவற்றின் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.