வெளிநாட்டு தடுப்பூசிகளை நமது நாட்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, உள்நாட்டில் மீண்டும் ஒருமுறை தனியாக பரிசோதனைகள் நடத்தத் தேவையில்லை.வேறு நாடுகளிலோ அல்லது உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது’ என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இதையொட்டியே, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை மத்திய அரசு இறக்குமதி செய்தது.அதை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், அமெரிக்காவின் ‘பைஸர், மாடர்னா’ தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசுஅந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தங்கள் தடுப்பூசிகளால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட சட்டப் பிரச்னைகளில் இருந்து மத்திய அரசு பாதுகாப்பு அளித்தால் தடுப்பூசிகளை வழங்கத் தயார்’ என, அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.தற்போதுள்ள அவசரத் தேவையைக் கருதி, அந்த நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், பைசர் தடுப்பூசிகளால் வெகு சிலருக்கு ஏற்படும் இருதய அழற்சி நோய் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆய்வுகள் சமீபத்தில் வெளியாகியுள்ள சூழலில், இது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும். அரசின் கொள்கையை சுட்டிக்காட்டி சீனா தனது தடுப்பூசிகளை நமது தலையில் கட்ட முயற்சி எடுக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.