தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்குகள், எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளன. அமலாக்கத்துறையும் தனியாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்தால் அதுதொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து முதல்வர் நீக்குவாரா என பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், “எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மோசடி செய்து விட்டார் என்று குற்றம்சாட்டிய இன்றைய முதல்வர் ஸ்டாலினால் மீண்டும் அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, அந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்றும், மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இனியும் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு இழுக்கே. இந்த அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்கக்கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா ஸ்டாலின்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.