தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தது முதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 900 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறுகிறார் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. ஆனால், இவர் மீட்ட நிலங்கள் யாவும் ஒரு சில எதிர்கட்சியினர், பெரிய ஆக்கிரமிப்பு என கூறப்படும் அளவிற்கு இல்லாமல் சாதாரண பொதுமக்கள் பயன்படுத்திவந்த இடங்கள், அரசின் மற்ற துறைகள் வசமுள்ள இடங்களாகவே உள்ளன.
தி.மு.கவினர், மாற்று மதத்தினர் ஆக்கிரமித்துள்ள ஏராளமான இடங்கள் ஆங்காங்கு இருக்கையில் அவற்றை எல்லாம் மீட்காத அமைச்சர் சேகர் பாபு, இதை போன்ற சாதாரண இடங்களை மட்டுமே மீட்பதாகக் காட்டிக்கொண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள்தர தவறுவது இல்லை. வடபழனி கோயில் நிலத்தை மீட்டதாக கூறும் இவர்கள்தான், அக்கோயிலின் நிலத்தை முஸ்லிம்களின் மசூதிக்கு விட்டுக்கொடுக்கும் விஷயத்தில் வாயை மூடி மௌனம் காத்தனர். நெல்லையில் உள்ள வள்ளியூர் முருகன் கோயில் நிலத்தில் அனுமதியின்றி சர்ச் கட்டிய கிறிஸ்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்களை மூடிக்கொண்டுள்ளனர்.
இதுவரை யாரிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டன. சட்டத்திற்கு புறம்பாக அதனை அனுபவித்து வந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, அவர்களிடம் இருந்து இருந்து அதுவரை அவர்கள் அனுபவித்த அந்த நிலங்களுக்கான இழப்பீடு, வரி, அபராதம் உள்ளிடவை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இவற்றில் மாற்று மதத்தவரிடம் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள் எவை என்பதை எல்லாம் வெள்ளை அறிக்கையாக சமர்ப்பித்தால் அமைச்சர் மீதான நம்பிக்கை கூடும். இல்லை எனில், தி.மு.கவின் வழக்கமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகவே மக்களால் கருதப்படும்.