நூலக பாடவேளை ஏன்?

தி.மு.க தலைமையிலான தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, சில நாட்களுக்கு முன் கொரோனாவை காரணம் காட்டி அனைத்து பள்ளிகளிலும் இறை வணக்கம், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது. கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள், நீதிபோதனை, தேசியக் கொடி ஏற்றுதல், முக்கிய செய்திகளை வாசித்தல், நல்ல பண்பு கருத்துகளை எடுத்துரைத்தல் போன்ற ஒருசில நல்ல விஷயங்கள் பள்ளிகளில் இறை வணக்க நேரத்தில் மட்டும்தான் நடத்தப்பட்டன.

அத்தகைய இறை வணக்கத்தை தடுப்பதன் மூலம், மாணவர்களின் தேசப்பற்று, கடவுள் பக்தி, நல்ல சிந்தனைகளை தடுப்பதுதான் தி.மு.கவின் உள்நோக்கமா? என பெற்றோரும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, அனைத்து பள்ளிகளிலும் நுாலக பாடவேளைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெளிப்பார்வைக்கு மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிக்கவும், உலக அறிவை வளர்க்கவும் எடுக்கப்பட்ட நல்ல முயற்சியாக இது தெரிந்தாலும், சிறுபான்மையினர் நடத்தும் பல பள்ளிகளில் உள்ள நூலகங்களில், அறிவையும் சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களுக்கு பதிலாக, தற்போதெல்லாம் வரட்டு திராவிட சிந்தனை, நாத்திக நஞ்சு, கம்யூனிச கசடுகள், மத பிரச்சார நூல்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.

சில நாட்களுக்கு முன், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தருவதற்காக ஈ.வெ.ராமசாமி எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் 2,000 பிரதிகள் வழங்கப்பட்டது. இது குறித்து கேட்டபோது, நூலகத்திற்கு என கூறி மழுப்பினார் அதன் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா. இச்சம்பவத்தை எதிர்த்து பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படி, பல பள்ளிகளுக்கு இதுபோன்ற புத்தகங்கள் இலவசம் என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. இந்த நூல்களை மாணவர்களை வாசிக்க வைத்து அதன் மூலம் அவர்களிடம் மத பிரச்சாரம் செய்யவும், பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கவும் தி.மு.க அரசு முயல்கிறதா அல்லது சிறுபான்மையினரை திருப்திபடுத்தவும், நாத்திக திராவிட கம்யூனிச தோழர்களை ஊக்குவிக்கவும் செய்யப்படும் வாக்கு வங்கி அரசியலா இது? என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இறை வணக்கத்திற்கு தடை விதித்த ஒரு சில நாட்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலக பாடவேளை அறிவிப்பு, மக்கள் மனத்தில் இதுபோன்ற சந்தேகங்களை விதைத்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், தி.மு.க எதை செய்தாலும் அதில் உள்நோக்கமும் சுயநலமுமே பிரதானமாக இருக்கும் என்று.

மதிமுகன்