இலங்கையை போலவே பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீள பாரதம் உதவும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதாக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கிடைக்கும் சிறந்த நேரம் தான். நமது அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில், இந்தாண்டு இறுதியில் பிரமதர் மோடி பாகிஸ்தானுக்கு உதவுவார் என்பதே எனது தனிப்பட்ட கணிப்பு. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் உள்நாட்டு அரசியல் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவை கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இது ஆபத்தான கூட்டணி ஆகும். அண்மைகாலமாக பாரதம் அமெரிக்கா இடையிலான நட்புறவு வலுவடைந்து வருகிறது. எனினும் பாரதத்தில் இருந்து வெகுதொலைவில் அமெரிக்கா உள்ளது. எனவே அண்டை நாடுகளுடன் பாரதம் சுமுக உறவை பேணுவது அவசியம். வெளிநாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் உதவி பெறுவது கடினம். அந்த நாடு பாரதத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கி, வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை தூண்டியுள்ளது. ‘பாரதத்தின் முதுகில் குத்தும் பாகிஸ்தானுக்கு பாரதம் உதவ வேண்டும் என்று சர்வதேச அளவில் சதி நடைபெற்று வருகிறது. பல்வேறு வகைகளில் அரசுக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. இவர் தீவிர காங்கிரஸ் விசுவாசி என்பதும், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நட்பு அனைவருக்கும் தெரிந்ததே’ என மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.