கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பா.ஜ.கவின் வானதி சீனிவாசன், விளக்கேற்றி வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தமிழக முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால்கூட பரவாயில்லை, கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு முன்பாக ஏற்கெனவே ஒரு குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மாநகரம். 98 குண்டுவெடிப்புக்கு பின்னர்கூட இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜகவின் பல்வேறு தலைவர்களை இந்த மண்ணிலே நாங்கள் பலிகொடுத்திருக்கிறோம். கோவையில் பயங்கரவாத செயல்கள் நடந்தும் இன்னும் முதல்வர் ஸ்டாலின் வந்து பார்க்கவில்லை. இது பற்றி முதல்வர் இன்னும் வாய் திறக்காதது ஏன்? கோவையை இன்னும் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் முதல்வர் இருக்கிறார் என்ற எண்ணம் தான் எழுகிறது. எல்லாவற்றுக்கும் பத்திரிகை அறிக்கை கொடுக்கின்ற முதல்வர், தங்களது அமைச்சர்கள் வாயிலாக பதிலளிக்கின்ற முதல்வர், இந்த சம்பவம் குறித்து ஏன் வாயை திறக்க மறுக்கிறார். உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் கிடையாது. தமிழக மண் பயங்கரவாத செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றால், இந்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்க வேண்டும். இதனை முதல்வர் கௌரவ பிரச்சனையாக பார்க்கக்கூடாது. இம்மாதிரியான செயல்களை ஒருபோதும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம். இதுபோன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பவர்கள், சிறையில் இருந்தபடி இதுபோன்ற செயல்களை தூண்டுவிடுகிற, திட்டம் தீட்டுகிற நபர்கள், தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர் என்பது முதல்வருக்கு தெரியுமா? தமிழகம் முழுவதும் இது மாதிரியான பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.