காஷ்மீர் பண்டிட் கொல்லப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், காஷ்மீர் பண்டிட் சமூகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்டான ராகுல் பட் கொலை குறித்து அரசியல் கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன? என கேள்வி எழுப்பினார். மேலும், “காஷ்மீரி பண்டிட்களின் கோபம் நியாயமானது. ஆனால், ராகுல் காந்தி, மமதா, கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே போன்ற மதச்சார்பின்மை முழக்கங்களை எழுப்பும் கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன? காஷ்மீரி பண்டிட்டுகள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? இதன் மூலம், காஷ்மீரி பண்டிட்டுகள் மீதான அட்டூழியங்கள் இந்த கட்சிகளுக்கு ஒரு பொருட்டல்ல என்று நன்றாகத் தெரிகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு மீண்டும் திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக பண்டிட்டுகளுடன் இணைந்து நிற்குமாறு பள்ளத்தாக்கின் உள்ளூர் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் பயங்கரவாதத்திலிருந்து விடுபடாத வரை, நாட்டில் உள்ள மக்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள், பண்டிட்டுகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவார்கள் ”என்று கூறினார். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை குறித்து பேசிய இந்திரேஷ் குமார், “இந்த விவகாரம் குறித்த உண்மை வெளிவர வேண்டும், இது நாடு சரியான பாதையில் செல்ல உதவும். தாஜ்மஹால், ஞானவாபி மசூதி, கிருஷ்ண ஜென்மபூமி பற்றிய உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும். எந்த அளவுக்கு உண்மை அறியப்படுகிறதோ, அந்த அளவுக்கு நாடு சரியான பாதையில் செல்லும்,” என்றார்.