ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் சென்று, “சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டும். உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றான் ராமன்.
சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தான்.
மோதிரம் வாங்கிச் சென்ற ராமன் வெகுநாளாகியும் திருப்பித்தரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான். “என்ன ராமா! தங்க மோதிரம் இரவலாக வாங்கினாயே, இன்னும் திருப்பித் தரவில்லையே!” என்றான்.
“தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது என்னுடையது. உன்னிடம் இருந்து நான் ஒன்றும் வாங்கவில்லையே!” என்று ஒரு போடு போட்டான் ராமன்.
சோமன் நேராக சென்று மரியாதை ராமனிடம் முறையிட்டான்.
மரியாதை ராமன், அந்த ராமனை அழைத்து விசாரித்தார். ராமனோ “ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பது என் மோதிரம்” என்றான்.
இதைக் கேட்ட மரியாதை ராமன் “நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து மோதிரம் யாருக்கு சொந்தம் என்று தெரியவில்லை. நாளை வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வந்தார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது. அவர் அதை உரைக்கல்லில் நிறுத்தாமல் அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த சோமன் “ஐயா என் மோதிரத்தை இப்படியே தேய்த்து கரைத்து விடுவாய் போலிருக்கிறதே!” என்று கதறினான்.
ராமனோ பேசாமல் இருந்தான். பின்னர் பொற்கொல்லர் மோதிரத்தின் மதிப்பை குறைவாக விலை சொன்னார். அந்த விலையைக் கேட்டதும் சோமன் கோபமுற்றான். “என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்குகூட இல்லையே!” என்று கூச்சலிட்டான்.
இதைக்கேட்ட மரியாதை ராமன், ராமனைப் பார்த்து “உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்திருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்காக நான்தான் இப்படி செய்ய சொன்னேன். இப்போது மோதிரத்திற்கு உரியவர் யார் என்பது தெரிந்துவிட்டது.” என்று சொல்லி மோதிரத்தை சோமனிடம் ஒப்படைத்தார்.
சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ராமனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.