சாடுவது யாரை?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 11 மாதங்களாக பணியாற்றிய சஞ்சீப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு சென்னையிலிருந்து விடைபெற்று சென்று விட்டார். ஆனால், அவர் மேகாலயா செல்லும் முன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனக்கு 11 மாதங்களாக ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு “இன்று நிலவும் நிலப் பிரபுத்துவ செயல்பாடுகளை என்னால் முற்றாக ஒழிக்க முடியவில்லை” என்று சாடி இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறையையும் பற்றி ஒரு கருத்தைச் சொன்னதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டிக்கப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். இப்பொழுது சஞ்சீப் பானர்ஜி சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமையின் மீதானதா? சமூகத்தின் மீதானதா? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். சாதாரண வழக்கறிஞர்களோ அல்லது குடிமகனோ பாதிக்கப்பட்டாலும் நீதித்துறையை பற்றி விமர்சிக்க முடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் இதுபோன்று எப்படி சொல்ல முடியும்? அந்த கருத்து எதன் மீதான தாக்குதல்? என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.