மொத்த விற்பனையாளர்கள் அடாவடி ஆவின் பால் விலை 1 ரூபாய் உயர்வு

சென்னையில் நாள்தோறும், 14 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இதில், 6.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை, 52 மொத்த விற்பனையாளர் வாயிலாக நடக்கிறது. மீதமுள்ள பால், ஆவின் வாயிலாக நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையாளர்களுக்கு பாக்கெட்டிற்கு 1 ரூபாய் குறைத்து, பால் வழங்கப்படுகிறது. வாகன போக்குவரத்து செலவிற்கும் மானியம் வழங்கப்படுகிறது. சேதம் அடையும் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று பால் வழங்க, கூடுதல் பால் பாக்கெட்டுகள், வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு பால் பாக்கெட் விற்பனை செய்வதன் வாயிலாக, 1.75 ரூபாய் கமிஷன் கிடைக்கும். கடைகளுக்கு சப்ளை செய்யும்போது, 75 காசு குறைத்து கொடுக்க வேண்டும். ஆனால், கடைகளுக்கு முழு விலையில் மொத்த விற்பனையாளர்கள், சப்ளை செய்ய துவங்கியுள்ளனர். இதனால், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட்டிற்கு, 1 ரூபாய் கூடுதலாக வைத்து விற்று வருகின்றனர். மொத்த விற்பனையாளர்களின் அடாவடியால், நுகர்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை காவாங்கரையை சேர்ந்த காஞ்சனா என்பவர் கூறுகையில்: பால் பாக்கெட்டிற்கு 1 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்கின்றனர். கடைக்காரரிடம் கேட்டால், மொத்த விற்பனையாளர்கள் விலை ஏற்றி விட்டனர். கடை வாடகை, மின் கட்டணம், குளிர்சாதன பெட்டி பராமரிப்பு என பல செலவுகள் உள்ளன என்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மற்ற மாவட்டங்களில் உள்ளது போல, மொத்த வியாபாரிகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.