அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ‘மேட்ரைஸ் நியூஸ் கம்யூனிகேஷன்’ என்ற ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 43 சதவீத மக்கள் தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சிறந்த முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை 21 சதவீதத்தினரும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 20 சதவீதத்தினரும் தேர்வு செய்துள்ளனர். இதில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடைசி இடத்தை பிடித்துள்ளார். மேலும் கொரோனா 2வது அலையை குறித்த கேள்விக்கு 73 சதவீதம் பேர் யோகி ஆதித்தியநாத் கொரோனா 2வது அலையை சிறப்பாகக் கையாண்டதாகக் கூறியுள்ளனர். இதேபோல பெண்கள் பாதுகாப்பு, பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் ஆளும் பா.ஜ.க சிறப்பாக செயல்படுவதாக மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.