காங்கிரஸ்: கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் அடுத்தடுத்து பல ஊழல் வழக்குகளில் சிக்கி காங்கிரஸ் கட்சி முழி பிதுங்கி நிற்கிறது. இதில், ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும், ‘அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட்’ என்ற நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ உட்பட பல பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 90 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. இந்த கடன் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம் சொற்ப தொகைக்கு விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனத்தில், காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் நோக்கத்தில் இந்த பரிமாற்றம் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சோனியாவும், ராகுலும் ஜாமினில் உள்ளனர். இதை தவிர, 2012ல் நடந்த நிலக்கரி ஊழல், 2008ல் நடந்த ‘2ஜி’ ஊழல், 2010ல் நடந்த காமன் வெல்த் விளையாட்டு ஊழல் என, காங்.,கின் ஊழல் பட்டியல் மிக பெரியது.
திரிணமுல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மீது, ரோஸ் வேலி ஊழல், ஷாரதா ஊழல், ஆசிரியர்கள் பணி நியமன ஊழல், பசு கடத்தல் ஊழல் உட்பட, 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன.
தி.மு.க.,: தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட, தி.மு.க.,வை சேர்ந்த 13 தலைவர்கள், 1.34 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்து உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்., மாதம் பகிரங்க குற்றஞ்சாட்டினார். மேலும், ‘2ஜி’ வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டதாக தி.மு.க., தலைவர்கள் கூறி வரும் நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தி.மு.க., – எம்.பி., ராஜா ஆகியோர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக இந்த ஊழல் வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி: புதுடில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சி என்ற முழக்கத்துடன் துவங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அக்கட்சி தலைவர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். அக்கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் சிறையில் உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம்: பீஹாரை சேர்ந்த தொழிலதிபர் அஜய்குமார் சிங் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சமீபத்தில் சோதனை நடத்தின. பாட்னா, பெகுசராய், நொய்டா, காஜியாபாத், கோல்கட்டா, ஒடிசா உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தன. இந்த அஜய்குமார் சிங் என்பவர், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீஹாரின் நிதி அமைச்சர் விஜய்குமார் சவுத்ரியின் மைத்துனர். தொழிலதிபர் அஜய்குமாரும், ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் லாலன் சிங்கும் மிக நெருக்கமானவர்கள்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம்: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பெயரை சொன்ன உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தான். இந்த வழக்கில் அவர் தண்டனை பெற்று சிறை சென்றார். இப்போது, ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு, அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, மகனும் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் சட்ட விரோத சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தேசியவாத காங்கிரஸ்: இப்போதைக்கு சரத் பவார் அணி, அஜித் பவார் அணி என ரெண்டாக பிளவுபட்டுள்ள இந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து எக்குதப்பாக சிக்கிக் கொண்டுஉள்ளனர்.
சிவசேனா: கொரோனா பெருந்தொற்று காலத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கான மையங்களை அமைத்ததில், அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும் ஊழல் செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் மீது, பணப்பரிமாற்ற மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதை தொடர்ந்து, விரைவில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி: உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி வகித்த காலத்தில், 97 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு துறைகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடக்கிறது.