தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தமிழக அரசுக்கும் அதன் முதல்வருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது பதிவில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதாக கருதுகிறார். சமூக நீதிக் கூட்டமைப்பை முன்னிறுத்தும் அவரது முயற்சியும் நேற்று அவர் ஆற்றிய உரையும் அப்படித்தான் பிரதிபலிக்கின்றன. 1967ல் தி.மு.கவின் சித்தாந்த வழிகாட்டியான அறிஞர் அண்ணா விரும்பிய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) இடஒதுக்கீட்டை அவர் விரும்பவில்லை. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அரசு, எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தி சமூக நீதியை நிரூபித்துள்ளது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் அளும் காங்கிரஸ் அரசு மற்றும் பீகாரிலும் ஐக்கிய ஜனதாதள அரசுகளும் இதனை செயல்படுத்தியுள்ளன. ஸ்டாலின் தனது ஆட்சியின் அவலங்களையும், சமூக நீதியில் அதன் தாக்கத்தையும் மறந்துவிட்டாரா? அரசுத் துறையில் வாக்குறுதியளிக்கப்பட்ட 3.5 லட்சம் வேலைகள் எங்கே? கடந்த 2 ஆண்டுகளில் எஸ்.சி பிரிவினருக்கான துணைத் திட்டத்தில் 12,884 கோடி ரூபாய்க்கும் மேலான நிதி, ஏன் தமிழக அரசால் செலவிடப்படவில்லை? மாநில அரசுத் துறைகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. அவற்றை எப்போது நிரப்ப திட்டமிட்டுள்ளீர்கள்? கடந்த ஆண்டு எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான 33 திட்டங்களில், 13 திட்டங்கள் உங்கள் அரசால் நிறைவேற்றப்படாமல் இருந்தது ஏன் என்று விவாதித்தீர்களா? எஸ்.சி சகோதர, சகோதரிகள், தி.மு.க செயல்பாட்டாளர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் அனுமதிக்கப்படுவதில்லை. குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் நடந்து 3 மாதங்களுக்கும் மேலாகிறது. இதனால் வேங்கைவாயல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நீங்கள் எப்போது எழுவீர்கள்? இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் சித்தாந்த ஆலோசகர் கி. வீரமணி குறைந்த பட்சம் வேங்கைவாயலுக்கு வருகை தந்தாரா? நாம் இங்கு என்ன சமூக நீதியை போதிக்கிறோம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.