பள்ளிகள் திறப்பு எப்போது?

அரசாங்கங்களே, தயவுசெய்து பள்ளிகளைத் திறந்திடுங்கள் இல்லையெனில் ஒரு தலைமுறை பேரழிவு ஏற்படும் என யுனிசெஃப் அமைப்பு உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ‘குழந்தைகள் இளைஞர்கள் பள்ளிக்கு செல்லாததால் ஏற்படும் இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. கற்றல் இழப்பு, மன உளைச்சல், மதிய உணவு கிடைக்காதது, ஆன்லைனில் படிக்க முடியாத சூழல், சமூகத்தில் பழக முடியாத சூழல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அது வன்முறை, துஷ்பிரயோகமாக வெளிப்படுகிறது. கொரோனா முற்றிலும் குறைந்தால்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஏற்க முடியாது’ என கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் ‘பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, கொரோனா முன்னெச்சரிக்கையை கடைபிடிப்பது, தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற செயல்களால் பள்ளிகளை பாதுகாப்பாக திறக்க முடியும். ஆன்லைன் கல்வி மற்றும் மதிய உணவு பற்றாகுறையால் சுமார் 150 மில்லியன் குழந்தைகள் பள்ளி படிப்பில் இருந்து வெளியேறுகிறார்கள், இது பெரிய பாதிப்பு’ என கூறியுள்ளார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ‘கொரோனா தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழகம், புதுவை, ஒடிசா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் மீண்டும் பள்ளிகள் திறப்பதை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.