வாட்ஸ்அப் சொல்லும் சேதி

வாட்ஸ்அப் நிறுவனம் மே 15ம் தேதிமுதல் ஜூன் 15ம் தேதி வரை இருபது லட்சம் இந்திய பயனர்களுக்கு தடை விதித்துள்ளது. ஏன்? வணிகர்கள்- வாடிக்கையாளர்கள் இடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதற்காக முதலில் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயலி, இன்று உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை ஈர்த்துள்ளது. புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள், குரல் பதிவுகள் ஆகியவற்றை யும் அனுப்ப முடியும் என்பதால் நமது தனிப் பட்ட தகவல்களின் பாது காப்பு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. நமது செய்திகளை ஹேக்கர்கள் நினைத்தால் படிக்க முடியும் என்ற நிலையும் இருந்து வந்தது.
பின்னர், இதற்கு end- to end encrypted தொழில்நுட்பம் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்தது வாட்ஸ்அப். ஆனாலும், வாட்ஸ்அப் தவறான தகவல்கள் பரவுவது அதிகமாக நடக்கிறது. இதை சமூக விரோத சக்திகள் தவறாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்கள் வாட்ஸ்அப்பில் உலா வந்தன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் காரணமாக குற்றங்கள் அதிகரித்தன.
இந்தச் சூழலில் தான் சமூக வலைதளங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய அரசு, புதிய தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை அண்மை யில் கொண்டுவந்தது. அதற்கு இணங்க வாட்ஸ்அப் தனது முதல் அறிக்கையை (ஜூலை 15) வெளியிட்டது. சமூக வலைதளங்கள் மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பது இப்போது கட்டாயம். அந்த அறிக்கையில்தான் மே 15- ஜூன் 15 காலகட்டத்தில் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தீங்கு விளைவிக்கும் நடத்தை” காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தாய் நிறுவனமான பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில், 3 கோடிக்கும் அதிகமான உள்ளடக்கங்களை இதே காலகட்டத்தில் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சீனா, ஈரான் போல பாரத அரசும் நமது மக்கள் பயன்படுத்தும் செயலிகளை நெறிமுறைப்படுத்த எடுத்துள்ள முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த எச்சரிக்கையுடன், தவறான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதுடன், அத்தகைய தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் நாம் நமக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும்.
தகவல்களை பரிமாறிக் கொள்ள மத்திய அரசு வடிவமைத்துள்ள சந்தேஷ் (Sandes) செயலியைப் பயன்படுத்துவது குறித்தும் நாம் ஏன் யோசிக்கக் கூடாது?

-க.தி.மணிகண்டன்.