என்ன சொல்ல வருகிறார் ஸ்டாலின்?

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103வது திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியாமலும் இருந்தனர். இந்த சமூக அநீதியை சரி செய்யவே, கடந்த 2019 ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் அவைகளில் விவாதத்திற்கு வந்தபோது, அதனை தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அப்படியெனில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்று ஸ்டாலின் சொல்ல வருகிறாரா? 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி தவறாக பிரச்சாரம் செய்யாமல், காலங்காலமாக இடஒதுக்கீடு கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.