என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?

உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவரான ஹரீஷ் ராவத், பஞ்சாப் விவகாரங்களை கவனிக்க காங்கிரஸ் தலைமையால் பணிக்கப்பட்டார். ஆனால், அங்கு எதுவுமே அவரது கட்டுப்பாட்டில் மட்டுமல்ல சோனியா குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்நிலையில் தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு ஹரீஷ் ராவத் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தது, அவர் அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்தும் கட்சியை விட்டும் துரத்தியது, பிறகு தானும் பதவியை ராஜினாமா செய்தது, மீண்டும் இணைந்தது, புதிய முதல்வர் தேர்வு என எதுவுமே ஹரீஷ் ராவத்தின் கட்டுப்பாட்டில் நடக்கவில்லை.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சி, அமரீந்தர் சிங் புதிய கட்சியை துவக்கி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க ஆலோசனை, அகாலிதளமும் சில நிபந்தனைகளுடன் பா.ஜ.க கூட்டணிக்கு இசைவு போன்றவை ஒருபுறமும், பஞ்சாப்பின் உண்மை விவசாயிகள் பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்தின் மகத்துவத்தை புரிந்துகொண்டு விவசாய போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் தேசவிரோத போராட்டங்களை புறக்கணித்து வருவது மறுபுறமும் காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளன. விரைவில் அங்கு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோற்கப்போவதை தடுக்கமுடியாமல் கைகளை பிசைகிறது காங்கிரஸ்.

இந்நிலையில், பஞ்சாப் தோல்வி பழியை சுமக்கும் பலிகடாவாக தான் மாறப்போவதை உணர்ந்த ஹரீஷ் ராவத், நெருங்கிவரும் உத்தராகண்ட் சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, “என் ஜன்மபூமியில் (உத்தராகண்ட்) என்னால் சரியாக செயல்பட்டால் மட்டுமே, என் கர்மபூமிக்கு (பஞ்சாப்) என்னால் நியாயம் செய்ய முடியும்” என்று கூறி விலகி ஓடுகிறார்.

விரைவில் நடைபெற உள்ள பல மாநில தேர்தல்கள், விலகி ஓடும் தலைவர்கள், ஜி23 அணி என்ற எதிர்ப்பு அணித் தலைவர்கள், உட்கட்சித் தேர்தல்கள்கூட நடத்தமுடியாத எதிர்ப்பு சூழல், சோனியாவின் வயது மூப்பு, ராகுலின் முதிர்வற்றத் தலைமை, பிரியங்காவின் செல்லுபடியாகாத நடிப்பு, குடும்பத்தில் உள்ள இம்மூவர் மட்டுமே கட்சி எனும் நிலை என பலமுனை பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் காங்கிரஸ் இவற்றை எல்லாம் சீரமைத்து மீண்டுவர என்ன செய்யப்போகிறது?