மணிப்பூரில் நடந்த வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் கீழ் நடந்ததாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யு) பேராசிரியர் பகத் ஓயினம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக டெல்லி மணிப்பூரின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மக்கள் கூட்டணி மற்றும் டெல்லி மணிப்பூரி சொசைட்டி ஆகியவற்றின் பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அதில் பேசிய அவர், மணிப்பூரில் தேர்தல் அரசியலின் மூலம், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக வெளியில் இருந்து வந்து வாக்காளர்களாகப் பதிவு செய்த குகி மக்களின் செல்வாக்கின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் ஒரு நோக்கமாகும். அதனால்தான் இந்த வன்முறை நடந்தது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வன்முறையில் குறிவைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார். மேலும், அரசியல் சட்டத்திற்கு முரணாக, மியான்மரில் இருந்து வந்த குகி சமூகத்தினருக்கும் மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர்களுகு பாரத குடிமக்களுக்கான போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் யார் என்பதும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஸ்பியர் கார்ப்ஸ் பிரிவின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் (ஜி.ஓ.சி) மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கை சந்தித்து மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தார். மனிதாபிமான உதவிகளை வழங்குவது, இயல்புநிலையை மீட்டெடுப்து உள்ளிட்டவற்றில் நடந்துகொண்டிருக்கும் முயற்சிகளையும் இவற்றை ஒருங்கிணைப்பது குறித்தும் விளக்கினார். முதல்வர் ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் பிரிவு மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகளின் முயற்சிகளைப் பாராட்டினார்.