ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பிரதேசத்தில் வித்யாபாரதி அமைப்பின் பிராந்திய அலுவலகம் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர், ‘உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றுடன் கல்வியும் மக்களின் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. வாடகை வீட்டில் வசித்து பசியுடன் இருந்தாலும் தங்களின் பிள்ளைகள் நல்ல கல்வி கற்க வேண்டும் என பெற்றோர் உறுதியாக உள்ளனர். கல்வி கற்பதில் லாபம் சம்பாதிக்க முயற்சிக்கும் மேற்கத்திய கண்ணோட்டம் இருக்கக்கூடாது. பாரத கல்வி அமைப்பின் மூலம் ரூ. 210 லட்சம் கோடி லாபம் ஈட்ட முடியும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால், வித்யாபாரதி அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கோடு இல்லாமல், பாரத தேசத்தவர் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றன’ என தெரிவித்தார். இந்த பிராந்திய அலுவலகத்தில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் கல்வி கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மத்தியப் பிரதேச சுற்றுப் பயணத்தின்போது, குரு தேஜ் பகதூரின் 400வதுபிறந்த நாள் விழாவையொட்டி, உஜ்ஜைனியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மோகன் பாகவத் குரு தேஜ் பகதூரின் படத்தைத் திறந்து வைத்தார்.