ஸ்டாலின் அவதூறு வழக்குக்கு வரவேற்பு

தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மகன், மருமகன் மற்றும் தி.மு.க அமைச்சர்கள், எம்.பிக்களின் சொத்துப் பட்டியலையும் ஸ்டாலின் மீதான ஊழல் புகாரையும் கடந்த மாதம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று தி.மு.க சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒரு சில தி.மு.க தலைவர்கள் மட்டும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐ.பிஎ.ஸ் அதிகாரியாக இருந்தவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார். முதல்வர் ஸ்டாலின் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கெனவே ஐந்து நபர்கள் சி.பி.ஐக்கு புகார் கொடுத்து இருக்கிறார்கள். முதல்வரின் இந்த வழக்கு தொடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் அவர் மீது வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டு விசாரணைக்கு வர அவரே வழிவகை செய்துகொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.