கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், அதன் தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனுாரில் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்துவதில்லை வேலை நிறுத்தம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து “பல நெருக்கடிகளுக்கு இடையே விசைத் தறிகளை இயக்கி வருகிறோம். இந்நிலையில் மின் கட்டண உயர்வு அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். ஆணைய அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்குமாறு மனு அளித்தோம். ஆனாலும் மின் கட்டணத்தை உயர்த்தியதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அது நிறைவேறும் வரை உயர்த்திய மின் கட்டணத்தின்படி கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்து எதிர்ப்பை தெரிவிக்க போகிறோம். நான்கு நாட்களுக்குள் முடிவு தெரியாவிட்டால் பொதுக்குழுவை கூட்டி விவாதித்து வேலை நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்போம்” என பழனிசாமி கூறினார்.