மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்; அமைச்சர் துரைமுருகன்

“மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது,” என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடான டென்மார்க் சென்றிருந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்றிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டென்மார்க் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசும் போது, சென்னையில் உள்ள ஆறுகளை சீரமைப்பது குறித்து பேசினேன். ஒரு வாரத்திற்குள் டென்மார்க் அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப உள்ளனர். காவிரியின் நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரிய அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. வழக்கு தீர்ந்து இது தான் முடிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர் நிலைமை என்னவென்று எனக்கு தெரியாது. தமிழக அரசு, கர்நாடகாவிடம் பேச முடியாது. பேசினாலும் தவறு. அது முடிந்து போன விவகாரம். தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன். மீண்டும் டில்லி சென்று, காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எக்காரணத்தைக் கொண்டும், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது. ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவிலும், கன்னடர்கள் தமிழகத்திலும் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே, பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரு அரசுகளின் கடமை. அதை தமிழக அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர்களும் உணர்வர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.