‘மோடி ஆட்சியில் எல்லாருடனும் இருப்போம்; எல்லாருக்காகவும் பாடுபடுவோம்!’ மத்திய நிதியமைச்சரின் அதிரடிக்கு பெண்கள் கைதட்டி பாராட்டு

கோவையில் நடந்த விழாவில், வங்கிக்கடன் கிடைக்கவில்லை என்று கத்திய நபரை, மேடைக்கு அழைத்துப் பேச வைத்து, அவருக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சரை, பல ஆயிரம் பெண்கள் கைத்தட்டிப் பாராட்டினர்.  மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 3,749 கோடி ரூபாய் மதிப்பில், மாபெரும் கடன் வழங்கும் விழா, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடந்தது. மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, ஏராளமான பயனாளிகளுக்கு, கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

அப்போது, பார்வையாளர் பக்கத்திலிருந்து ஒருவர், ‘மேடம் மேடம்’ என்று சத்தமிட்டு, வெகுநேரமாக அழைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து, வங்கி அதிகாரிகள் சிலர், ‘என்ன காரணத்துக்காக மேடத்தை அழைக்கிறீர்கள்?’ என்று விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் மீண்டும் சத்தமாக, மேடையைப் பார்த்து கையைத் துாக்கிக் கத்திக் கொண்டிருந்தார்.

இதனால் ஊடகத்துறையினர் பலரும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவரை போட்டோ எடுக்கவும், கேள்விகள் கேட்டு வீடியோ எடுக்கவும் ஆரம்பித்தனர்.

அவரைச் சுற்றிலும் பெரும் கூட்டம் கூடி விட்டதால், ஒட்டு மொத்தக் கூட்டத்தின் கவனமும் அந்தப் பக்கம் திரும்பியது. உடனே மேடையிலிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மைக்கைப் பிடித்து, அந்த நபரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் பேசுகையில், ”இத்தனை பேர் பயன் பெறும் வகையில், மாபெரும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, ஒருவரைச் சுற்றிலும் ஊடகத்துறையினர் சூழ்ந்து, அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

”தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று சொல்லும் அந்த நண்பரை மேடைக்கு அழைக்கிறேன். இங்கு வாருங்கள். வந்து உங்கள் மனதிலுள்ள வேதனையைச் சொல்லுங்கள். ”நீங்கள் உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். நான் ஏன் லோன் தரவில்லை என்று விசாரித்து, ஆய்வு செய்து சொல்கிறேன்,” என்றார்.

அதைத் தொடர்ந்து, அவரை மேடைக்கு போலீஸ் அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் அழைத்து வந்தனர். அவரிடம் மைக்கைக் கொடுக்கச் சொன்னார் நிதியமைச்சர்.

அந்த மைக்கை வாங்கிய அந்த நபர், ”என் பெயர் சதீஷ்; சாய்பாபா காலனி கிராஸ்கட் ரோட்டில் ஆபீஸ் வைத்துள்ளேன். எனக்குச் சொந்த ஊரே இதுதான்,” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து அவர், ”இதே ஊரில்தான் நான் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில், முற்றிலும் நஷ்டத்துக்கு உள்ளாகி விட்டேன். மீண்டும் தொழில் செய்வதற்கு சாய்பாபா காலனி பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் கடனுதவிகேட்டேன்.

”கடந்த ஆகஸ்டிலிருந்து லோன் கேட்டவர்களுக்கு, இங்கு லோன் தருவதாகக் கூறுகிறீர்கள். எனக்கு ஏன் இதுவரை லோன் தரவில்லை. எதற்காக ‘ரிஜெக்ட்’ செய்தனர் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

அவர் பேசி முடித்தபின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”உங்க லோன் சம்பந்தப்பட்ட பேப்பரைக் கொடுங்க. நான் அதை எங்கே அனுப்ப வேண்டுமோ, அனுப்பி ஆவன செய்கிறேன்,” என்றார்.

அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை, அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், கைத்தட்டிப் பாராட்டினர். இதேபோல, மேலும் பலரும் வங்கிக்கடன் கேட்டுக் கிடைக்கவில்லை என்று மனு கொடுத்தனர்.

மனுக்களை வாங்கிக் கொண்ட அமைச்சர், அவற்றுக்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஒரு நபர், ‘நீண்ட காலமாக விவசாயக்கடன் கேட்டும் தரவில்லை’ என்று மனு கொடுத்தார். அவருடைய சட்டையில் பயனாளிகளுக்குத் தரப்படும் வட்ட வடிவ பேட்ஜ் குத்தியிருந்தார். அதைப் பார்த்த அமைச்சர், ”கடன் கிடைக்கவில்லை என்றால் இந்த பேட்ஜ் எப்படி கிடைத்தது?” என்று கேட்டார்.

அதற்கு அவர், ”இது இருந்தால்தான் உள்ளே விடுவர் என்று சொன்னார்கள். அதனால் பொய் சொல்லி வாங்கினேன்,” என்று ஒப்புக் கொண்டார். அவரிடம், ‘நீங்கள் செய்தது தவறு’ என்று சொன்ன அமைச்சர், அவரிடம் மனுவை வாங்கிக் கொண்டு, விழா ஏற்பாட்டாளர்களை அழைத்துக் கடிந்து கொண்டார். நிதியமைச்சர் பங்கேற்ற விழாவில், வங்கிக் கடனுதவி கிடைக்கவில்லை என்று பரபரப்பை ஏற்படுத்தி, மேடையில் ஏறி புகார் தெரிவித்த சதீஷின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை, பாங்க் ஆப் பரோடா சீனியர் கிளை மேலாளர் அனுப்பியுள்ளார்.

அதில், ‘டாக் டெல் லைப் ஸ்டைல்’ என்ற நிறுவனம் பெயரில், 40 லட்சம் ரூபாய்கடனுதவி கேட்டு, நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை, ‘சிபில்’ அறிக்கையின்படி பரிசீலித்ததில், நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கும் சுபஸ்ரீ, ஸ்மிருதி சதீஷ் ஆகிய இருவரும், கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தாதது தெரியவந்துள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிரெடிட் கார்டுகளுக்கும்,வங்கிக்கடனுக்கும் எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.