தமிழை வளர்க்க முயற்சிக்க வேண்டும்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் அக்டோபர் 28ல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.கவின் உண்மை முகத்தையும் அதன் நோக்கங்களையும் தோலுரித்துக் காட்டினார். மேலும், தி.மு.க குறித்து ஈ.வே ராமசாமி சொன்னவற்றையும் அதாரத்துடன் பட்டியலிட்டார். இது பொதுமகளிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இதற்கு பதிலடி தருவதாக நினைத்துக்கொண்டு, தி.மு.க சார்பில் வரும் நவம்பர் 4ம் தேதி தமிழகம் முழுவதும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” நேற்று தமிழக பா.ஜ.க சார்பில் தி.மு.கவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர், நவம்பர் 4ம் தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டுவிட்டு தமிழை வளர்க்க தி.மு.க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக பா.ஜ.க ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.