ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பா.ஜ.க. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பா.ஜ.க நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது தி.மு.க அரசு. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பா.ஜ.க செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பா.ஜ.க தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். இதே போன்று திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளருமான சூர்யா கைது செய்யப்பட்ட வழக்கிலும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, ‘ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது தி.மு.க அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பா.ஜ.க தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக பா.ஜ.க. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின் மற்றும் மமதா பேனர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.