மீரா பயந்தர் கார்பரேசனுக்குட்பட்ட பகுதிகளில் கழிவறை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் பா.ஜ.க முன்னாள் எம்.பியான கிரித் சோமையாவின் மனைவியான மேத்தா சோமையா பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் கூறியிருந்தார். இந்த ஆதாரமற்ற குற்றசாட்டை எதிர்த்து மேத்தா சோமையா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த அவதூறு வழக்கில் சிவசேனா எம்.பியான சஞ்சய் ராவத் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்தார். செவ்ரி பெருநகர நீதிமன்றம் சஞ்சய் ராவத்துக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் ஜூலை 4 அன்று ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கூறியிருந்தபோதும் சஞ்சய் ராவத் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால், மேத்தா சோமையாவின் வழக்கறிஞர், சஞ்சய் ராவத்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். நீதிபதிகளும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து மும்பை நீதிமன்றம், சஞ்சய் ராவத்துக்கு எதிராக வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.