வக்பு வாரிய சொத்துக்களை இனம் காண்பதாக கூறி, கடலுார் மாவட்டத்தில் காலம் காலமாக அனுபவித்து வரும் பொதுமக்களின் சொத்துக்கள் பதிவுத்துறை மூலம் முடக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் கொதிப்படைந்துள்ளனர். ‘வக்பு வாரிய சொத்து என கண்டறியப்பட்டவை மீது, பத்திரப்பதிவு செய்யக்கூடாது’ என, தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறைக்கு ‘வக்பு’ வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அவ்வகையில் தற்போது, கடலுார் மாவட்டத்தில் கடலுார், புவனகிரி, சிதம்பரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 16 பத்திரவு பதிவு சார் பதிவாளர அலுவலகங்களுக்கு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கடலுார் மாவட்டம் முழுவதும், 187 சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 பக்கங்களுக்கு சர்வே எண்கள் வாரியாக, சொத்து விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்த இடங்களின் பத்திரவுப் பதிவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பதிவுத்துறை முடக்கம் செய்துள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் இடத்தை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடங்களை வங்கியில் அடமானம் வைத்தவர்கள், கடன் பெற்றவர்களும் வங்கியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்திரப் பதிவு மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 30 சதவீதம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் வெறுத்துப்போன பலர் நீதிமன்றத்தை நாடத் துவங்கியுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மீட்புக் குழு அமைத்து, வக்பு வாரிய சொத்துக்களை இனம் காண்பதாக கூறி எந்த முகாந்திரமும் இல்லாமல், பொதுமக்களின் சொத்துக்களை முடக்கம் செய்யும் வக்பு வாரிய நடவடிக்கையை கண்டித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.