ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் சமீபத்தில் ஜீலம் நதி என்று அழைக்கப்படும் வைதஸ்தா நதி தோன்றிய நாளை முன்னிட்டு வைதஸ்தா தேவியை வழிபடும் ‘வைத் துருவா’ விழாவை கொண்டாடினர். முஸ்லிம் பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டு இடம்பெயர்வதற்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த பண்டிட்டுகள் இந்த நதியில் ஆண்டுதோறும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடி வந்தனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரின் இந்த பழமையான கலாச்சாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, சனாதன் தரம் சிதல் நாத் ஆசிரம சபையுடன் இணைந்து சாந்தி மானஸ் அறக்கட்டளையின் முயற்சியால் இவ்விழா நடத்தப்பட்டது. இவ்விழா ஸ்ரீநகரில் உள்ள ஹப்பா கடல் என்ற இடதில் நடைபெற்றது. அன்று மாலை, ஸ்ரீநகரில் உள்ள கோயில்களை ஒட்டிய ஐந்து படித்துறைகளில் அகல் விளக்குகள் ஏற்றி ஆறுகளில் விடப்பட்டன. இந்த கொண்டாட்டங்கள் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளின் சிறிய ஊர்வலத்துடன் முடிவடைந்தது. ‘காஷ்மீரில் இந்த பழங்கால பழக்கவழக்கங்களின் மறுமலர்ச்சியைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புனிதமான கொண்டாட்டம் முஸ்லிம்கள், சீக்கியர்கள் உட்பட அனைத்து சமூகங்களிளின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. இது காஷ்மீரில் அமைதி, வகுப்புவாத நல்லிணக்கம், இயல்பு நிலை திரும்புவதை பிரதிபளிக்கிறது’ என்று சாந்தி மானஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த அஞ்சலி கௌல் கூறினார்.