வி.எல்.சி மீடியா பிளேயர் தடை

அலைபேசி, இணையதளங்களில் படங்கலை பார்க்க, கேட்க பலரும் பயன்படுத்தும் பிரபலமான ஓப்பன் சோர்ஸ் மீடியா பிளேயரான ‘விஎல்சி மீடியா பிளேயர்’ சில மாதங்களுக்கு முன்பு பாரதத்தில் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.எல்.சி மீடியா பிளேயர் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய இணைய சேவை வழங்குநர்களாலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை வி.பி.என் சேவையை பயன்படுத்தி அலைபேசி அல்லது கணிணியில் அணுகும் வகையில் இன்னமும் கிடைக்கிறது. மேலும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. நமது நாட்டில் வி.எல்.சி  இணையதளத்திற்கான அணுகல் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசிடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் நமது அலைபேசி, கணினி உள்ளிட்ட சாதனங்களை ஹேக் செய்ய ‘சிக்காடா’ மால்வேர் மூலம் வி.எல்.சி மீடியா பிளேயரில் ஊடுருவிய சீன ஹேக்கர்கள் குழுவின் விளைவாக இந்த தடை இருக்கலாம் என கருதப்படுகிறது. சிக்காடாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாரதம், அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், ஹாங்காங் மற்றும் பல நாடுகளில் காணப்படுகின்றனர். ஏப்ரலில், இந்த சிக்காடா குழு பல நாடுகளைத் தாக்கியுள்ளது. குறிப்பாக, உயர்மட்டத்தில் உள்ளவர்களை இது குறிவைக்கிறது என சைமென்டெக்கின் இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.