விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நகை உருக்கும் திட்டம்

ஹிந்துக்களுக்கு எதிராகவே என்றும் செயல்பட்டு வரும் தி.மு.க அரசு, கோயில்களில் கடவுளுக்கு பக்தர்கள் அளித்த தங்க நகைகளை உருக்கி வருகிறது. ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் விடாப்பிடியாக இதனை செயல்படுத்தி வருகிறது. தங்கத்தையும் அதில் உள்ள விலை உயர்ந்த வைர வைடூரிய கற்களையும் கொள்ளை அடிக்கவும், பாரம்பரிய நகைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள டிமாண்டை பயன்படுத்தி, உருக்குவதாக கணக்குக் காட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு விற்கவும், ஹிந்து பாரம்பரியம், கலாச்சாரங்களை அழிக்கவுமே இத்திட்டத்தை தி.மு.க செயல்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், 1977ம் ஆண்டு முதலே தமிழக கோயில்களின் நகைகள் உருக்கி தங்கக் கட்டிக்களாக மாற்றப்பட்டுள்ளன, இதுவரை இரண்டரை லட்சம் கோடி மதிப்புடைய 500 டன் தங்க நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது, அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில், இதில் வரும் வட்டியான ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிகளை வைத்து தமிழகத்தையே சொர்கபூமியாக்கி இருக்கலாம். அப்படியெனில், அவ்வளவு பணமும் என்னவானது, யார் கைகளுக்கு இத்தனை வருடங்களாக இத்தனை கோடிகளும் செல்கின்றன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியே 700 டன் தங்கத்தை தான் கையிருப்பு வைத்திருக்கிறது. எனினும், உலகில் அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் பத்தாவதாக உள்ளது பாரதம். அந்த வரிசையில் உலக அளவில் 12ம் இடத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை பெரும் பணக்கார அமைப்பாக இருக்க வேண்டும். தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்த இத்தகவலின்படி, தமிழகத்தை சேர்ந்த கோயில்களே உலகின் பணக்கார பட்டியலில் முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால், கணக்கீட்டின்படி இதில் வரவேண்டிய ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி என்ற வட்டிக்கு பதிலாக வெறும் 11 கோடியே வருவதாக கணக்கு காட்டப்படுகிறது.

தமிழக ஹிந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்த தகவல்கள், கோயில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஹிந்து ஆலயங்களைவிட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது போன்ற வாதங்களை வைத்துவரும் பல்வேறு ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளன என்றால் மிகை அல்ல.