பாரத மக்கள் குருவை வணங்கும் குரு பூர்ணிமா தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடிய வேளையில், ஆர்கனைசர் இதழுக்கு இதுகுறித்து பேட்டியளித்த ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் சுவாமி அவதேஷானந்த் கிரி ஜி மகராஜ், குரு பூர்ணிமாவின் மகத்துவம், குரு சிஷ்ய பரம்பரை, சீடர்களின் மனதை வடிவமைப்பதில் குருவின் பங்கு, வேதக் கல்வி, பாரதிய மதிப்புகளில் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம், நமது சனாதன கலாசாரத்தில் குருவின் பங்கு, ஆன்மீக வழ்வில் குருவின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், ஆன்மீக விழிப்புணர்வு காரணமாக பாரதம் விஷ்வ குருவாக மதிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில், நமது பாரதிய கலாச்சாரம், உணவுப் பழக்கம், யோகா, ஆயுர்வேதம் போன்றவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்று, முழு உலகமும் மேற்கத்திய நாடுகளும் பாரதத்தின் கலாச்சார, ஆன்மீக வாழ்க்கை விழுமியங்கள் உலகளாவிய நலனுக்கானவை என்பதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளன.பாரதத்தில் மேற்கத்திய நாகரீகம் வேகமாகப் பரவியது. அதிர்ஷ்டவசமாக நமது பழமையான மற்றும் தெய்வீக பாரம்பரியம் ஒருபோதும் அழியாது. நமது கலாச்சார நம்பிக்கைகள், பண்டிகை மரபுகள் நிரந்தரமானவை. எது உண்மையோ அது நித்தியமானது. அது காலம் கடந்தாலும் மறையாது. ஒரு மேகம் சூரியனின் ஒளியை என்றென்றும் மறைக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேராசையின்றி, அச்சமின்றி, மதமாற்றம் இல்லாமல் எந்தக் கலாச்சாரம் செழித்து வளர்கிறதோ, அதுவே சனாதன ஹிந்து வேதக் கலாச்சாரம். முனிவர்கள், ஞானிகளின் பூமி என்று அழைக்கப்படும் பாரதம், பல நூற்றாண்டுகளாக உலகத் தலைவராக பல நாடுகளால் பார்க்கப்பட்டு வருகிறது. விஸ்வ குருவாக மாறுவதற்கு பாரதம் முழு மனிதகுலத்தையும் அதன் ஆன்மீக விழுமியங்களின்படி வழிநடத்த வேண்டும். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நெருக்கடி போன்ற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் சரியான திசையைக் காட்ட வேண்டும். பாரதம் அதன் மென்மையான சக்தி, ஆன்மீக விழிப்புணர்வு, யோகா, ஆயுர்வேதம், பண்டிகைகள், மரபுகள் காரணமாக எப்போதும் உலக குருவாக மதிக்கப்படுகிறது. விஸ்வ குருவாக மாறுவது என்பது உலகில் நமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது அல்ல, மாறாக மனிதநேய விழுமியங்களைப் பரப்புவது’ என கூறினார்.