ரம்ஜான் பண்டிகை என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத, விதிமுறை மீறல்கள், மக்களை அச்சுறுத்தும் அராஜகத்தில் ஈடுபடும் சில விஷமிகள் அமைதியை பேணிக் காக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரம்ஜான் வந்துவிட்டால் இரவு நேரங்களில் இளைஞர்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ரேஸ் விடுகின்றார்கள். அதற்கு பந்தயம் கட்டுகின்றார்கள். மேலும் இந்த பண்டிகைக்கு ஒட்டகங்களை வெட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். நீதிமன்றம் தடை விதித்ததால் சட்டவிரோதமாக சில இடங்களில் வெட்டுகின்றார்கள். ஹிந்துக்கள் புனிதமாக வழிபடும் பசுவை நடுரோட்டில் வைத்து வெட்டுகின்றார்கள். நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளில் உள்ள வதைக் கூடங்களில் வைத்து வெட்டுவது கிடையாது. மேலும் ரம்ஜான் அன்று இவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தொழுகை நடத்தாமல் பல்வேறு இடங்களில் நடுரோட்டில் வைத்து சட்ட விரோதமான தொழுகை நடத்துகின்றார்கள். கோவை பகுதியில் குனியமுத்தூர், மதுரை மாநகர், சென்னை போன்ற பகுதிகளிலும் நடுரோட்டில் வைத்து தொழுகை நடத்துகின்றார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெரிய கோயில் வழியாக ரம்ஜான் ஊர்வலமாக சென்று கோயில் முன்பு அல்லாஹூ அக்பர் என்று கோஷம் இடுகிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் பண்டிகை வருகின்ற பொழுது அந்த வழியாக மசூதி இருக்கின்றது, ஊர்வலம் போகக் கூடாது, மேளம் அடிக்கக் கூடாது என்று கூப்பாடு போடுகின்றார்கள். மேலும் பல்வேறு ஊர்களில், பள்ளிக்கூடங்களில் உள்ள மைதானத்தில் தொழுகை நடத்துகின்றார்கள். திருப்பூர் நொய்யல் வீதி பள்ளியில் ஏற்கனவே தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டதில் இங்கே எந்தவித மத நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்று மாநகராட்சி கூறியுள்ளது. ஆனால் சட்ட விரோதமாக இங்கே தொழுகை நடத்துகின்றார்கள். சென்னையில் பல்வேறு பள்ளி மைதானத்தில் தொழுகை நடத்துகின்றார்கள். இவர்கள் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காகவும், மக்களை அச்சுறுத்துவதற்காகவும் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்று மக்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். இந்து முன்னணி, அவர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதை எதிர்க்கவில்லை. அவர்கள் மத வழிபாட்டை தாராளமாக கொண்டாடட்டும். ஆனால் ஹிந்துக்களை அச்சுறுத்துவதாக சட்ட விரோதமாக நடத்துவதையும், அரசு அதிகாரிகளை மிரட்டுவதையும் இந்து முன்னணி கண்டிக்கின்றது. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசும், காவல்துறையும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்களுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழகத்தினுடைய அமைதியை பேணிக் காக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கின்றது” என தெரிவித்துள்ளார்.