விஜய சங்கல்ப யாத்திரை

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனை முன்னிட்டு கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை இதற்காக நடத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கியுள்ளது. பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, விஜயாப்புராவில் நடந்த கூட்டத்தில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ,க ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட மாநில வளர்ச்சி, சிறப்பான சட்டம் ஒழுங்கு, வெளிப்படைத் தன்மையுள்ள ஆட்சி நிர்வாகம் போன்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். முழுமையான வளர்ச்சி என்றால் அது பா.ஜ.க என்று பொருள். அனைத்து தரப்பினரின் வளர்ச்சியே பா.ஜ.கவின் மந்திரம். மாறாக, மக்கள் விரோத, ஊழல்வாத, கமிஷன், ஜாதியவாதம், மக்களை பிளவுபடுத்துவது என்றாலே அது காங்கிரஸ் என்று பொருள். எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல், ஜாதி அரசியல், மண்டல அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால் பா.ஜ.க அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மையமாககொண்டு செயல்படுகிறது. பிரதமரின் கனவு திட்டமான டிஜிட்டல் பாரதம் திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பாரதம் அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. கடந்த 2022ல் டிசம்பர் மாதம் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு 782 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களில் உலக அளவில் பாரதத்தின் பங்கு 40 சதவீதம் ஆகும். கடந்த 2014 வரை வெறும் 350 கிலோ மீட்டர் நீளத்திற்கு தான் ஓ.எப்.சி. கேபிள் வயர்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அது தற்போது 2.78 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது” என கூறினார்.