அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் மதுபான விற்பனை உரிமம் வழங்கும் கொள்கை, அதில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த கொள்கையை டெல்லி அரசு அவசர அவசரமாக கடந்த ஜூன் மாதம் திரும்பப் பெற்றது. கலால்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் சிசோடியாவின் வீடு மற்றும் அவருடைய வங்கி லாக்கரை சி.பி.ஐ., சோதனை செய்தது. இந்நிலையில், பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாள்வியா, சமூக வலைதளத்தில் ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “மதுபான விற்பனை உரிமம் மோசடி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சன்னி மார்வாவின் தந்தை குல்விந்தர் மார்வாவிடம், ரகசிய கேமரா வாயிலாக விசாரிக்கப்பட்டது. அப்போது இதில் நடந்த மோசடிகள் குறித்து அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் பொய்கள் வெளிப்பட்டுள்ளன. மதுபான மாபியாக்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாயிலாக கோடிக் கணக்கில் கறுப்புப் பணம் கைமாறியுள்ளது” என கூறினார். பா.ஜ.கவின் டெல்லி தலைவர் ஆதேஷ் குப்தா, “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, டெல்லியில் பழைய கொள்கையின்படி, மாதத்துக்கு 132 லட்சம் லிட்டர் மதுபானம் விற்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 5,068 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், புதிய கொள்கையின்படி, மதுபான விற்பனை 245 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆனால், வருவாய் 4,465 கோடி ரூபாயாக குறைந்துள்ளது” என்றார்.