கோவை அன்னூரை அடுத்த குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், பொகளூர், இலுப்பநத்தம், பொள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் அப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். வாழை, தென்னை, மஞ்சள், சோளம் உள்ளிட்டவை அப்பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. ஆடு, மாடுகள் வளர்ப்பும் இங்கு முக்கியத்தொழில். தினமும் 20 ஆயிரம் லிட்டர் பால் இங்கு உற்பத்தியாகிறது. பல ஆண்டு காலப் போராட்டங்களுக்குப் பிறகு அப்பகுதிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் தண்ணீர் கிடைக்க உள்ளது. இதனால், விவசாயம் பெருகும் என விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இங்கு தமிழக அரசின் டிட்கோ சார்பில் 3,832 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழக பா.ஜ.க அவர்களுடன் துணை நின்றது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விவசாயிகளின் வீட்டிற்கே சென்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து, இங்கு துவக்கப்பட்ட அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக டிட்கோ தெரிவித்துள்ளது. எனினும் முழுமையாக வாபஸ் வாங்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.