வி.ஹெச்.பி வரவேற்பு

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி) அறிமுகப்படுத்தப் போவதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சனிக்கிழமை அறிவித்திருந்தார். இதனை, விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். ‘கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும். பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு மாநிலத்தின் கடமை என்று அரசியலமைப்பின் ஸ்தாபக தந்தைகள், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 44’ல் தெளிவுபடுத்தியுள்ளனர். நம் நாட்டின் நீதிமன்றங்கள் பலமுறை இதனை வலியுறுத்தியுள்ளன. மத்திய அரசும் இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. ஆனால், பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் சில பிரச்சனையாளர்கள் அதனை கண்டிப்பாக எதிர்ப்பார்கள். கோவாவில் பொது சிவில் சட்டம் இல்லையா? அனைவருக்கும் ஒரே மாதிரியான அந்த சட்டங்களை மக்கள் ஏற்கவில்லையா?’ என்று கூறினார். முன்னதாக, பா.ஜ.க தேசிய செயலாளர் சுனில் தியோதரும் புஷ்கர் சிங் தாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். நாட்டில் சீரான சிவில் சட்டத்தை கொண்டு வர இதுவே சரியான நேரம் என்று கூறியிருந்தார்.