காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்இரண்டு நாள் மத்திய ஆட்சிக் குழுக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில் வி.ஹெச்.பி இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிஹாத்தை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் சட்டம் இயற்ற வேண்டும். ஹிந்து மத நம்பிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு எதிராக கோயில்களை இடிக்கும் அச்சுறுத்தல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவப்பட்டு வரும் 2024ல் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. வி.ஹெச்.பி 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை அமைப்பில் சேர்க்கும். 1 லட்சம் நிர்வாக குழுக்கள், 15 லட்சம் காரியகர்த்தாக்களுடன் செயல்படும். ஆயிரமாண்டுகளாக ஹிந்து தர்மத்தின் ஜோதியாக விளங்கும் தமிழகத்தால் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் பெருமை கொள்கிறது” என்று கூறினார்.
வி.ஹெச்.பி அறிக்கை:
மதமாற்ற எதிர்ப்பு மற்றும் லவ் ஜிஹாத் சட்டம்: சட்ட விரோத மத மாற்றம் மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் மற்றும் வன்முறை என்று வி.ஹெச்.பி கருதுகிறது. மௌலவிகள் மற்றும் மிஷனரிகள் இந்தக் குற்றத்தை தங்களின் மத உரிமைகளாகக் கருதி, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அனைத்து வழிகளையும் பயன்படுத்தி செய்துவருகின்றனர். இந்த சட்டவிரோத குற்றச் செயலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது. தங்கள் மாநிலங்களில் சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்க சட்டம் இயற்றிய மாநில அரசுகளை வி.ஹெச்.பி வரவேற்கிறது. தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் சட்டவிரோதமாக ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சிகள் நடக்கிறது. தஞ்சாவூரை சேர்ந்த லாவண்யாவின் மரணமும் அதில் ஒன்று. முஸ்லிம் அடிப்படைவாதிகள் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஹிந்துப் பெண்களைக் குறிவைத்து பாலியல் பொருளாகப் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஹிந்து சமுதாயத்தின் மீதான இத்தகைய அத்துமீறல்களை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் வன்முறை: இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் உருவான வன்முறையை ஒட்டுமொத்த நாடும் எதிர்கொள்கிறது. சி.ஏ.ஏ, கொரோனா, ஹிஜாப், நுபுர் சர்மா சர்ச்சையைப் பயன்படுத்தி, அவர்கள் வன்முறையால் நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர். தமிழகம் ஜிஹாதி பயங்கரவாதிகளின் மையமாகவும் ஆள்சேர்ப்பு மையமாகவும் மாறியுள்ளது. சமீபத்தில் பல முஸ்லிம் பயங்கரவாதிகள் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத ஆதரவு கட்டமைப்புகள் தமிழகத்தில் செழித்து வருகின்றன. அவர்களை அடையாளம் கண்டு, மக்களைப் பாதுகாப்பதில், அரசின் பாதுகாப்பு முகமைகளின் சில மெத்தனம் காட்டுகின்றன. காவல் துறையின் இந்த செயலற்ற தன்மை, வன்முறையை கட்டவிழ்த்துவிட, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களுக்குத் துணிச்சலை தரும். 1985ல் இருந்து இதுவரை தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்து அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அரசு, முஸ்லிம் பயங்கரவாதிகள் மீது உறுதியாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.ஹெச்.பி வலியுறுத்துகிறது.
கோயில்கள் விடுவிப்பு, கோயில் இடிப்பு நிறுத்தம்: ஹிந்து மடங்களும் கோயில்களும் யாத்திரைகளும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை ஹிந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தின் பாதுகாவலர்களும் கூட. அவை ஏழை மக்களுக்கும் சேவை செய்கின்றன. ஹிந்து சமுதாயம் அதன் அனைத்து மத இடங்களையும் வெற்றிகரமாக நிர்வகித்து வந்துள்ளது. கோயில் செல்வங்களை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள் ,நிர்வாகம் என்ற பெயரில் கோயில்களை கைப்பற்றினர். சுதந்திரத்திற்குப் பிறகும், மாநில அரசுகள் இந்தக் காலனித்துவ மனப்பான்மையைக் கடைப்பிடிக்கிறது. ஹிந்துக் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஹிந்து சமயத் தலங்களை ஹிந்து சங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சில மாநில அரசுகள் அறிவித்திருப்பதை வி.ஹெச்.பி வரவேற்பதுடன், தமிழகம் உட்பட மீதமுள்ள மாநில அரசுகளும் ஹிந்து கோயில்களை விடுவிக்கக் கோருகிறது. ஹிந்து சமுதாயம் தங்களின் பலத்தை உணர்ந்து, அனைத்து ஜாதி மற்றும் பாலினத்தைச் சேர்ந்த பூஜாரிகள் மற்றும் பக்தர்கள் அடங்கிய குழு மூலம் அந்தந்தப் பகுதி கோயில்களை நடத்தத் தயாராக இருக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் என்ற பெயரில் ஹிந்து கோயில்கள் தமிழக அரசால் பாகுபாடுடன் இடிக்கப்படுகின்றன. கடந்த 13 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதே நடவடிக்கையை மசூதி அல்லது சர்ச் மீது அரசு எடுக்கவில்லை. சட்டப்படி கோயிலை அகற்ற வேண்டுமென்றால், கோயில் கமிட்டி, உள்ளூர் ஹிந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வி.ஹெச்.பி கோருகிறது.
வெறுப்பு பேச்சு மீது நடவடிக்கை: வி.ஹெச்.பி எப்பொழுதும் பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால், பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களின் நம்பிக்கைகளை அவமதிக்க நமது அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஹிந்து மதம் மற்றும் அதன் தெய்வங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைப்படுத்துகிறது. நாடு முழுவதும் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அதன் தலைவர்களுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், புனிதமான சிவலிங்கம் அல்லது சிதம்பரம் நடராஜர் பற்றிய சமீபத்திய கருத்துக்கள் போன்று, ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் கருத்துகளை வெளியிட்ட குற்றவாளிகள் மீது பல்வேறு ஹிந்து அமைப்புகள் புகார் அளித்த போதிலும், அரசு நடவடிக்கை எடுக்காமல் செயலற்று உள்ளது. இப்படி அரசுகள் மௌனப் பார்வையாளனாக இருந்தால் ஹிந்து சமுதாயம் எழுந்து நின்று தன் பெருமையைக் காக்க வேண்டியிருக்கும் என்று வி.ஹெச்.பி எச்சரிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.